22000 கோடி ரூபாய் செலவில் நாசா செவ்வாய்க்கு அனுப்பிய ரோவர் விண்கலத்தை லண்டனில் இருந்து ஆட்டுவிக்கும் இந்தியர்

 

செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய ரோவர் விண்கலத்தை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் சஞ்சீவ் குப்தா லண்டனில் இருந்து இயக்கி வரும் ருசிகர தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் புவியியல் ஆய்வு குறித்த பட்டம் (Geologist) படித்த சஞ்சீவ் குப்தா, 1965 ம் ஆண்டு இந்தியாவில் பிறந்தவர்.

 

இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் இவர், வேற்று கோள்களில் உள்ள புவியியல் தன்மை குறித்தும் ஆராய்ந்து வருகிறார், இந்த ஆய்விற்காக நாசாவுடன் கைகோர்த்திருக்கிறார் சஞ்சீவ் குப்தா.

இதற்காக லண்டன் மாநகரில் லெவிஷம் பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பை, ஆய்வு மையமாக மாற்றி இருக்கும் சஞ்சீவ், அங்கு 5 கணினிகளை கொண்டு ரோவரின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்.

 

கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அடுத்து நாசாவின் அமெரிக்க ஆய்வு மையத்திற்கு சென்று தனது ஆய்வை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளதால், தனது வீட்டிலேயே நாசா விஞ்ஞானிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார், இதற்காக பிரத்யேகமாக இரண்டு திரைகளை வைத்துள்ளார்.

லண்டன், லெவிஷம் பகுதியில் உள்ள ஒரு அறையில் இருந்து 22000 கோடி ரூபாய் செலவில் நாசா அனுப்பியுள்ள பெர்ஸெவேரன்ஸ் ரோவர் விண்கலத்திற்கு, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை தோண்டி பார்க்க கட்டளைகள் பிறப்பிக்கும் பேராசிரியர் சஞ்சீவ் குப்தா,

“என்னுடைய இந்த ஆராய்ச்சி வீட்டில் உள்ள எனது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் பார்த்துக்கொள்வது பெரிய சவாலாக உள்ளது, இரவு நேரத்தில் அவர்களுக்கு எந்த தொல்லையும் இல்லாமல் இருப்பதற்காகவே இந்த இடத்தை தனியாக நான் வாடகைக்கு எடுத்துள்ளேன்” என்று கூறுகிறார்.