அன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி
புதுடெல்லி: கங்குலி தலைமையின்கீழ் ஜாகிர்கான் வெறிகரமான இடதுகை வேகப் பந்துவீச்சாளராக செயல்பட்டதைப் போல், விராத் கோலியின் தலைமையில், சிறந்த இடதுகை வேகப் பந்துவீச்சாளராக நடராஜன் செயலாற்றும் வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் கர்சான் கெளரி.
அவர் கூறியுள்ளதாவது, “இந்திய அணிக்காக நடராஜன் சிறப்பாக பங்காற்றுவார் என்பது தெரிகிறது. அவர் நல்ல திறமை வாய்ந்தவராக உள்ளார். அவர், தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினால், அவரால் நீண்ட நாட்களுக்கு அணியில் இடம்பெற முடியும்.
அவரால், நல்ல இடைவெளியில் பந்துவீச முடிகிறது. அவரால், நல்ல மாறுபாடுகளையும் கொண்டுவர முடிகிறது. டெத் ஓவர்களில் அவர் வீசும் யார்க்கர்கள்தான் அவரின் சிறப்பே. இந்தியாவிற்கு தேவைப்படும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இவர் பொருத்தமானவர்.
முன்பு, கங்குலியின் தலைமையில் ஜாகீர்கான் என்ற இடதுகை வேகப்பந்து வீச்சாளர் செயல்பட்டதைப் போன்று, இவரால், விராத் கோலியின் தலைமையின் கீழ் செயலாற்ற முடியும்” என்றுள்ளார் அவர்.