பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்திலிருந்து கழற்றி விடப்பட்ட நடராஜன்!

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, வீரர்களுடன் மேற்கொள்ளும் வருடாந்திர ஒப்பந்தத்தில் தமிழ்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், இந்த ஒப்பந்தத்தின் ‘சி’ பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

முக்கிய வீரர்களுடன், இந்திய கிரிக்கெட் வாரியம் வருடாந்திர ஒப்பந்தத்தை மேற்கொள்வது வழக்கம். அந்த ஒப்பந்த அடிப்படையில்தான், சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வீரர்களின், அந்த ஆண்டினுடைய கிரிக்கெட் செயல்பாடுகள் அமையும்.

வெளிநாட்டு கிளப்புகள் நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வது தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், சமீப மாதங்களில், கிரிக்கெட் உலகில் பிரபலமடைந்த நடராஜனின் பெயர் இந்த ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது பலருக்கு ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் கொடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் நடராஜனை ஒதுக்கிவிட்டதா? என்ற கேள்வியை சிலர் எழுப்பியுள்ளனர்.