முழங்கால் காயம் – ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் நடராஜன்!

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில், ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், முழங்கால் காயம் காரணமாக தொடரிலிருந்தே விலகியுள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவரின் இந்த விலகல், ஐதராபாத் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. டேவிட் வார்னர் தலைமை வகிக்கும் ஐதராபாத் அணியில், கடந்த 2 போட்டிகளாக நடராஜன் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போதே, இந்தப் பிரச்சினை நடராஜனுக்கு இருந்தது. அது தற்போது மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் விலகலை, ஐதராபாத் அணியின் முதன்மை நிர்வாக அதிகாரி கே.சண்முகம் உறுதிபடுத்தியுள்ளார். அதேசமயம், அவருக்கு பதிலாக யார் என்பதை அணி நிர்வாகம் இன்னும் முடிவுசெய்யவில்லை என்று கூறப்படுகிறது.

நடராஜன் விலகியுள்ள நிலையில், ஐதராபாத் அணியில் தற்போது, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சித்தார்த் கெளல், சந்தீப் ஷர்மா, பாசில் தம்பி மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.