ச‍ென்னை: கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ்.தோனி, எனக்கு வழங்கிய அறிவுரைகளான ஸ்லோ பவுன்ஸர் வீசுவது, அதிகமான கட்டர்களை வீசுவது போன்ற விஷயங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன என்று தமிழக வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளவருமான யார்க்கர் நடராஜன் தெரிவித்தார்.

அவர் பேசியிருப்பதாவது, “கடந்த ஐபிஎல் தொடரின்போது, சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் பேசுவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பு மிகப்பெரியது. என்னுடைய உடல் தகுதி குறித்துப் பேசிய தோனி, என்னை நன்றாக உற்சாகப்படுத்தினார். அதிகமான அனுபவத்தின் மூலம்தான் சிறப்பாக செயல்பட முடியும் என தோனி என்னிடம் தெரிவித்தார்.

பந்துவீசும்போது, ஸ்லோ பவுன்ஸர்கள், லெக் கட்டர், இன் கட்டர் போன்ற பந்துகளை அதிகமாக வீச வேண்டும். பந்துவீச்சில் எப்போதும் வித்தியாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என எனக்கு அவர் அறிவுரை கூறினார்.

கடந்த ஐபிஎல் தொடரில் தோனிக்கு நான் பந்துவீசியபோது, ஓவர் ஸ்லாட்டில் பந்தை பிட்ச் செய்தபோது, அதை தோனி 102 மீட்டர் உயரத்துக்கு சிக்ஸராகப் பறக்கவிட்டார். ஆனால், அடுத்த பந்தில் தோனி ஆட்டமிழந்தார். தோனி ஆட்டமிழந்தவுடன் நான் சந்தோஷப்படவில்லை.

முதல் பந்தில் அடித்த சிக்ஸர் மட்டும்தான் நினைவில் இருந்தது. அதைப் பற்றியே சிந்தித்தேன். நான் போட்டி முடிந்து ஓய்வறைக்கு வந்தபின் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதன்பின் தோனி என்னை அழைத்து என்னுடன் உரையாடினார்.

மற்றொரு மறக்க முடியாத தருணம் என்னவென்றால், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டிவில்லியர்ஸை யார்க்கர் மூலம் ஆட்டமிழக்கச் செய்தேன். அன்றுதான் எனக்கு மகள் பிறந்ததாக செய்தி வந்தது. நாக் அவுட் ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதை அனைவரும் பாராட்டினார்கள். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால், எனக்கு மகள் பிறந்த செய்தியை அப்போது யாரிடமும் சொல்லவில்லை” என்றுள்ளார் நடராஜன்.