பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு சிறைச்சாலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் சசிகலா. ஆனால், அவரது கணவரான ம.நடராஜன் ஏற்கனவே பெங்களூர் சென்றுவிட்டார். அங்கு  பரப்பன அக்ர ஹாரா சிறை வளாகத்தில், சசிகலாவை வரவேற்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று காலை 11.30 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட சசிகலா மறைந்த ஜெயலலிதா சமாதியில் சபதம் செய்துவிட்டு, எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் தியானம் செய்துவிட்டு பெங்களூர் நோக்கி பயண மானார்.

இன்று மாலை 4.30 மணி அளவில் அவர் பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிட்டிசிவில் கோர்ட்டில் ஆஜராவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் தற்போதுதான் கிருஷ்ணகிரியை தாண்டி சென்று கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளது.

இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு சசிகலாவின் கணவர் ம.நடராஜன் வந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அவர் ஏற்கனவே பெங்களூர் வந்துவிட்டதாகவும், சசிகலாவுக்கு உதவ தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தனது மனைவி மற்றும் உறவினர்கள் இன்னும் 4 ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டிய சிறைச்சாலை குறித்தும், அவர்களுக்கு தங்க அளிக்கப்பட இருக்கும் ரூம் மற்றும் உணவுகள் குறித்தும் அவர் விசாரித்ததாக கூறப்படுகிறது.