டில்லி

ஜாமியா மாலியா இஸ்லாமியா கல்லறையில் பல தேச பக்தர்களின் கல்லறைகள் சேதம் அடைந்துள்ளதை யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

உலகில் எந்த நாட்டிலும் தேச பக்தர்கள் என்றால் போற்றி கொண்டாடுவது வழக்கமாகும்.  அவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களின் நினைவிடத்துக்குப் பலரும் சென்று அஞ்சலி செலுத்துவது என்பதும் உலக நடைமுறையாகும்.   ஆனால் இந்தியாவில் பல தேச பக்தர்களின் நினைவிடங்கள் கவனிப்பார் அன்றி காணப்படுவது குறித்து வரலாற்று ஆய்வாளர் முகமது உமர் அஷ்ரஃப் எழுதியுள்ள பதிவை இங்குக் காண்போம்.

முகமது உமர் அஷ்ரஃப் டில்லியைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் ஆவார்.  இவர் சிவில் பொறியியலில் பி டெக் பட்டம் பெற்றவர் ஆவார்.  இவர் வரலாற்றில் மறந்து போன பல தலைவர்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்.  மேலும் அவர் செங்கோட்டை அருங்காட்சியகம் மற்றும் தேசிய நூலகத்தில் ஆய்வாளராக பணி புரிந்துள்ளார்.  இவருடைய பணியின் மூலம் ஹகீம் கபீருதின் போன்றவர்களின் வரலாறு வெளியாகி சமீபத்தில் அவருக்குத் தபால் தலை வெளியிடப்பட்டது.

உமர் அஷ்ரஃப், “நான் ஜாமியா மிலியா கல்லறைத் தோட்டத்துக்கு அங்குப் புதைக்கப்பட்டிருந்த பல சுதந்திர வீரர்களுக்கு மரியாதை செலுத்தச் சென்று இருந்தேன்.  அங்கு அந்த கல்லறைகளின் நிலையக் கண்டு நான் மனம் நொந்தேன். இங்குள்ள பல கல்லறைகள் சேதமடைந்தும் உடைந்தும் காணப்படுகின்றன.  ஒரு நாட்டின் சுயமரியாதை என்பது அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை மதிப்பதில் உள்ளது என்பதைப் பலர் மறந்து விட்டனர்.

குறிப்பாக பிரிகேடியர் முகமது உஸ்மானின் உடைந்த கல்லறையை சொல்ல வேண்டும். “புது யுகத்தின் சிங்கம்’ என முன்பு போற்றப்பட்ட அவரது கல்லறை விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டு அதை யாரும் கவனிக்காமல் உள்ளனர்.   இப்போதுள்ள தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டும் என்றால் இவருடைய இறுதிச் சடங்கு மட்டுமே பிரதமர் நேரு, ஜனாதிபதி ராஜேந்திர  பிரசாத், கவர்னர் ஜெனரல் ராஜாஜி மற்றும் பல தலைவர்கள் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் நடந்தது.

இவருடைய இறுதிச் சடங்கின் போது இஸ்லாமியப் பிரார்த்தனையைப் படித்தவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆவார்.  பாகிஸ்தான் அரசால் உயிருக்கு விலை வைக்கப்பட்டவர் முகமது உஸ்மான் ஆவார். இவரைக் கொல்வோருக்கு ரூ.50000 பரிசளிக்கப்படும் எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது.   பாகிஸ்தான் அதை 1948 ஆம் வருடம் ஜூலை மாதம் 3 ஆம் தேதி  வெற்றிகரமாக முடித்து இவர் உயிரைப் பறித்தது.

இவரது மறைவுக்கு முன்பே இவருடைய பெருமை தேசிய கதாநாயகன் என்னும் அளவுக்கு உயர்ந்தது.   இவர் இந்தியா உருவானதும் நடந்த 1947-48 போரின் போது செய்த வீரச் செயல்களுக்காக இவரைப் புது யுகத்தின் சிங்கம் என பலரும் போற்றினர்.  நமது நாடு அவரை மறந்து அவருடைய சிதைந்த கல்லறையைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.  இனியாவது அதைச் சீர்திருத்த அரசு முன் வர வேண்டும்” எனச் செய்தி வெளியிட்டுள்ளார்.