ஐதராபாத்:

திரையரங்கில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நிற்காத காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜனகனமன’ நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன்பு கண்டிப்பாக ஒலிக்கப்பட வேண்டும் என்றும், அப்போது பொதுமக்கள் மரியாதை செலுத்த வேண்டும் உச்ச நீதி மன்றம்  தீர்ப்பு கூறியது.

உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு பொதுமக்களிடையே விவாத பொருளாகி உள்ளது.

இதையடுத்து, திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமை ஐதராபாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் காஷ்மீர் மாநில மாணவர்கள் மூன்று  பேர்  அருகில் உள்ள திரையரங்குக்கு படம் பார்க்கச் சென்றுள்ளனர்.  திரையரங்கில் தேசிய கீதம் ஒலித்தபோது இந்த மூவரும் எழுந்திருக்காமல் அமர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தியேட்டர் நிர்வாகம் போலீசில் புகார் கொடுத்தது. அதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை  செய்து வருகின்றனர்.

காது  செய்யப்பட்ட 3 மாணவர்களும், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஓமர் பியாஸ் லுனே, முடாபிர் ஷபிர் மற்றும் ஜமீல்  குல் ஆகியோர் என்பதும், அவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரி கூறி உள்ளார்.