உதட்டில் ரயிலை ஓட விட்ட ஜானகி:
================================
ளையராஜாவின் இசையில் குயிலினும் இனிய குரலாக காற்றலையில் தவழந்து கொண்டிருந்த எஸ். ஜானகி, அதே இசை ஞானியுடன் இணைந்து இன்னும் சில சாதனைகளை செய்தார். பாரதிராஜாவின் முதல்படமாக உருவான ’16 வயதினிலே’ ஸ்டுடியோவுக்குள் முடங்கி இருந்த திரையுலகை கிராமத்து மண் தரைக்கு அழைத்துச் சென்றபடம். 1977ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி படம் வெளியானது. பரட்டையாக ரஜினிகாந்த், சப்பாணியாக கமல்ஹாசன், மயிலாக ஸ்ரீதேவி என அப்படம் தமிழ் திரையுலகில் புதிய அத்தியாயம் எழுதியது.

இந்த படத்தில் பாடல்கள் எல்லாமே ராஜா இசையில் அபார வரவேற்பை பெற்றதுடன் கங்கை அமரன் எழுதிய ’செந்தூரப்பூவே செதூரப்பூவே..’ பாடல் எஸ்.ஜானகி குரலில் ரீங்காரமாக ஒலிக்க தேசிய விருதை தமிழ் மண்ணுக்கு கொண்டு வந்து சேர்த்தது. அந்த பாடல் ஹிட்டானதும் பலரும் ஊர் ஊராக செதூரப்பூ எங்கிருக்கிறது என்று தெடத் தொடங்கி விட்டார்கள். பாடல் எழுதிய கங்கை அமரனிடம் கேட்டபோது, ’அப்படியொரு பூவே இல்லையே..’ என்றாரே பார்க்கலாம் எல்லோருக்கும் ஒரே சிரிப்பு கலந்த ஆச்சரியம். இந்த படத்துக்கு பிறகு பாரதிராஜா அனுப்பினார் பாருங்கள் ஒரு ரயில் அது எங்கு போய் நின்றதென்றே தெரியவில்லை.
 

1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி தமிழக திரையரங்கிற்குள் ஒடத் தொடங்கியது ’கிழக்கே போகும் ரயில்’. மறுபடியும் இளையாராஜா இசை , பாரதிராஜா இயக்கம், கங்கை அமரன் பாடல். ’பூவரசம் பூ பூத்தாச்சி பொண்ணுக்கு சேதி வந்தாச்சு..’ பாடலை பாடிய எஸ்.ஜானகி அந்த பாட்டில் சிகுபுகு சிகுபுகு என உதட்டிலேயே ரயிலை ஓட விட்டார் . இப்படத்தில் ராதிகா ஹீரோயினாக அறிமுகமானார். ஹீரோவாக சுதாகர் நடித்தார்.
’ரோஜா’ படம் மூலம் திரையுலகில் இசைப் புயலாக அதிரடியாக நுழைந்து இந்திய திரை யுலகையே கோலிவுட் பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் வருகை திரை இசையை கம்ப்யூட்டர் யுகத்தில் கொண்டு சென்றார். கருவிகள் இருக்காது ஆனால் எல்ல இசையும் கம்ப்யூட்டரில் வரும். கம்ப்யூட்டரி லேயே எல்லா இசையையும் தனி ஆளாக ரெக்கார்டிங் செய்துவிடுகிறார் என்று அவரைபற்றித்தான் எங்கு பார்த்தாலும் பேச்சாக இருந்தது.

1993ம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் ’ஜென்டில்மேன்’ படத்துக்கு இசை அமைத்த ரஹ்மான், ’ஒட்டகத்த கட்டிக்கோ..’ என்ற புதுமையான பாடலை பாட எஸ்.ஜானகியை கேட்டுக் கொண்டார். உடன் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட்டு சூப்பர் ஹிட்டு. அதே ஆண்டில் ’எஜமான்’ படத்துக்கு ராஜா இசையில் ’ஒரு நாளும் எனை மறவாத..’ பாடலுக்கு அழைப்பு, அதையும் ராஜாவின் பாராட்டுகளோடு பாடி முடித்தார். பாடலை எழுதியதுடன் படத்தையும் இயக்கி இருந்தார் ஆர்.வி.உதயகுமார்.
1994ம் ஆண்டு மறுபடியும் ரஹ்மான் இசையில் ’காதலன்’ படத்துக்காக. ’எர்ராணி குர்ரதானி’ என்ற பாடலை ராப் பாடலாக எஸ்.பி.பாலசுப்ரமணியதோடு இணைந்து பாடினார் ஜானகி.
1998ம் ஆண்டு வைரமுத்து எழுதிய பாடலுக்கு ரஹ்மான் இசையில் ’உயிரே’ படத்தில் ’நெஞ்சினிலே நெஞ்சினிலே’ பாடி நெஞ்சங்களை கொள்ளையடித்தார். ’முதல்வன்’ (1999) படத்தில் மீண்டும் வைரமுத்து வரிகளில் ’முதல்வனே..’ பாடலை சங்கர் மகாதேவனுடன் பாடிய ஜானகி. ’சங்கமம்’ (1999) படத்தில் ’மார்கழி திங்களல்லவா..’ பாடல் தனித்து பாடினார்.
 

பிரசாந்த், சிம்ரன் ஜோடிபோட்ட படம்’ஜோடி’ (1999). இப் படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எழுத்தில் உன்னி மேனனுடன் இணைந்து, ’காதல் கடிதம் தீட்டவே..’ பாடல் பாடினார் ஜானகி. இதற்கிடையில் 1995ம் ஆண்டு வித்யாசாகர் இசையில், ’மலரே மவுனமா..’ பாடலைவும் வைரமுத்து வரிகளில் எஸ்.பி.யுடன் இணைந்து பாடி மலர்களின் மவுனத்தை கலைத்தார் ஜானகி
2014ம் ஆண்டில், ’வேலையில்லா பட்டதாரி’ படத்திற்காக அனிருத் ரவிச்சந்திரன் இசையில் ’அம்மா அம்மா..’ பாடலை தனுஷ் எழுதி பாட அவருடன் இணைந்து பாடினார். 2016 ம் ஆண்டில் ’திருநாள்’ படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில், ’தந்தையும் யாரோ தாயாரும் யாரோ..’ பாடல் பாடினார்.
60 ஆண்டுகள், 17 மொழிகளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், 4 தேசியவிருதுகள், 32 மாநில விருதுகள் பெற்ற தனது எளிமையான தோற்றத்தை விருது களால் அலங்கரித்தார் எஸ்.ஜானகி.
தொடர்ச்சியாக பாடி வந்த எஸ்.ஜானகி 2000ம் ஆண்டு தொடங்கிய நிலையில் ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு தான் நீண்ட நாள் கழித்து 2014ம் ஆண்டு வேலையில்லா பட்டதாரிபடத்தில் தனுஷுடன் சேர்ந்து ’அம்மா அம்மா’ என்ற பாடலையும் ’திருநாள்’ படத்தில், ’தந்தையும் யாரோ..’ பாடலையும் பாடினார். 2016ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ’பத்து கல்பனாக்கள்’. இதில் இடம்பெற்ற ’அம்மா பூவினும்’ என்ற பாடலை பாடிய பின் இதுதான் எனது கடைசி பாடல் என்று அறிவித்தார்.
 

எஸ்.ஜானகியின் குரலுக்கு விருதுகள் சூட்டி அழகு பார்த்தன மத்திய, மாநில அரசுகள். ’16 வயதினிலே’ படத்தில் இளையராஜா இசை யில் ஜானகி பாடிய ’செதூரப்பூவே செதூரப் பூவே..’ பாடலுக்கு 1976ம் ஆண்டி மத்திய அரசின் தேசிய விருது கிடைத்தது. அடுத்து ’ஒப்போல்’ மலையாளப் படத்துக்கு 1980ம் ஆண்டு பாடிய ’எட்டுகனூரம் பழத்தில்..’ பாடலுக்கும். 1984ம் ஆண்டு தெலுங்கு மொழியில் ’சித்தாரா’ படத்தில் பாடிய, ’வென்னெல்லோ கோடாரி அந்தம்..’ பாடலுக்கும் 1982ம் ஆண்டு ’தேவர் மகன்’ படத்தில் பாடிய ’இஞ்சி இடுப்பழகி..’ பாடலுக்கும் தேசிய விருதுகளை தட்டி வந்தார் ஜானகி.
1986ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலைமா மணி விருது பெற்றார் ஜானகி. 2002ம் ஆண்டு கேரள மாநில விருது, 14 முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருதும், ஏழு முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருதும், 10 முறை ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருதும் பெற்றார். காலத்தே தரும் விருதுக்குத்தான் மரியாதை என்ற கொள்கை கொண்டிருந்தார் எஸ்.ஜானகி. 2016ம் ஆண்டு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்க தேர்வு செய்து மத்திய அரசு அறிவித்தது. ஆனால் திரையுலகுக்கு வந்து 55 ஆண்டுகள் ஆன பின்னர் இது எனக்கு கிடைக்கும் தாமதமான விருது என்று சொல்லி அந்த விருதை ஏற்க மறுத்துவிட்டார். மற்ற விருதுகள் எல்லாமே எஸ்.ஜானகியின் கழுத்தை அலங்கரிக்கும் அதிர்ஷ்டம் பெற்றிருந்தது, பத்ம பூஷண் விருதுக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. விருதை மறுக்கும் துணிச்சலும் ஜானகிக்கு இருந்ததை பலரும் பாராட்டினார்கள்.
1992ம் ஆண்டு எஸ்.ஜானகி இலங்கை சென்றார். அப்போது அவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் அங்கு அளிக்கப் பட்டது. சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல் பக்தி பாடல்களும் இவர் பாடி உள்ளார். ’மவுனபோராட்டம்’ என்ற படத்துக்கு இசை அமைப்பாளராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.
எனக்கு இந்த விருது தேவையில்லை என்று சொல்லும் துணிவு மட்டுமே போதாது இன்னொருவருக்கு நியாயம் கிடைக்காத போது எஸ்.ஏ.சந்திசேகரன் பட பாணியில் தீர்ப்புக்களை திருத்தி எழுதவும் வேண்டும் அதையும் செய்து காட்டினார் கானக்குயில். அந்த சம்பவம் ஒரு அதிசயத்தையே சினிமா உலகிற்கு கொண்டு வந்தது. என்ன அதிசயம் பார்க்கலாம் 24 மணி நேரம் காத்திருங்கள்.
எஸ்.ஜானகி தொடர் 3ம் பகுதி நிறைவு.
-கண்ணன்