தேசிய நல்லாசிரியர் விருது பெரும் ஒரே தமிழக ஆசிரியர்!

மிழகத்தை சேர்ந்த ஸதி என்ற ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில், கோவையை சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸதிக்கு மட்டுமே இந்த ஆண்டு விருது வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தினமான வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நல்லாசிரியர் விருதினை அளிப்பார்.

50 ஆயிரம் ரூபாய் பணம், சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கம் ஆகியவை ஆசிரியை ஸதிக்கு வழங்கப்படும். கடந்த வருடம் தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒருவருக்கு மட்டுமே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநிலங்களிலும் இருந்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்படுகிறது.

கடந்த வருடம் தேசிய அளவில் 350 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 45 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதில் ஒருவர் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்