கொல்கத்தா:

வெளிமாநிலங்களிலிருந்து குண்டர்களை அழைத்து வந்து அமீத்ஷா வன்முறையில் ஈடுபட்டதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.


கொல்கத்தாவில் அமீத்ஷா கலந்து கொண்ட பேரணியில் கலவரம் ஏற்பட்டது.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான்,உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்து குண்டர்களை அழைத்து வந்து அமீத்ஷா வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

வங்காள தொலைக் காட்சிகளில் இது ஒளிபரப்பப்பட்டது. ஆனால், தேசிய சானல்களில் இதை ஒளிபரப்பவில்லை.

பாஜகவுக்கு புரோக்கர்களாக இந்த சானல்கள் உள்ளன.  அமீத்ஷாவின் பேரணி முடிந்ததும், மேடைக்கு பாஜக குண்டர்கள் தீ வைத்தனர். சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையையும் சேதப்படுத்தினர்.

இதுபோன்ற வெட்கக்கேடான நிகழ்வை இதுவரை கொல்கத்தா கண்டதில்லை. நக்சல் இயக்கங்கள் உச்சத்தில் இருந்தபோதுகூட, இதுபோன்ற வன்முறை நிகழவில்லை.

இதனை விடப்போவதில்லை. நாங்களும் பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். வித்யாசாகர் சிலை மீது கை வைத்த உங்களை குண்டர்கள் என்று அழைக்காமல் எப்படி அழைப்பது. உங்கள் கொள்கையையும் அரசியல் பாதையையும் வெறுக்கிறேன் என்றார்.