டெல்லி:

நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை உருவாக்கி உள்ள தேசிய குடியரிமை திருத்த மசோதா பாராளுமன்றத்தில்  உள்துறை அமைச்சரால்  இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே, இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதையும் மீறி, குடியரிமை திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவந்து தஞ்சம் புகுந்துள்ளவர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்கே அனுப்பும் வகையில் தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மோடி தலைமை யிலான பாஜக அரசு கொண்டுவருகிறது.

ஏற்கனவே 1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மோடி அரசு கொண்டு வந்து,  கடந்த  ஆட்சியின் போது மக்களவையில் மட்டும் நிறைவேற்றியது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், அந்த மசோதா காலாவதியானது.

இந்த நிலையில், புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மோடி அரசு கொண்டுவந்துள்ளது இதற்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல்  வழங்கிய நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று லோக்சபாவில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்கிறார்.

கேள்வி நேரத்துக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து பேசி விவாதத்தை தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.