டில்லி:

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து, தேசிய மாநாட்டு கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்கு கடந்த 75 ஆண்டுகளக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து சீரமைப்பது தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில்  நிறைவேற்றப்பட்டது.

மத்தியஅரசின் இந்த அதிரடி முடிவுக்கு காங்கிரஸ் கட்சி உள்பட சில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காஷ்மீர் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காஷ்மீர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்யப்படதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மாநாட்டுக் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த மனுவை தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர்கள் முகமது அக்பர் மற்றும்  ஹஸ்னெய்ன் மசூடி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். அதில், அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கப்பட்டுள்ளது, அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும், இது தொடர்பான அறிவிக்க  ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்து உள்ளத.

மேலும், ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து  “அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019க்கு  தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவராக முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளது குறிப்பிடத்தக்கது.