டில்லி

தேசிய ஊரடங்கு நேரத்தில் செய்தித் தாள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் விநியோகம் செய்ய மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

கடந்த 24 ஆம் தேதி முதல் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த நாடெங்கும் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதில் அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை, காய்கறிகள், மருந்துகள் போன்ற பொருட்கள் விநியோகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.   ஆனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வருபவர்களைக் காவலர்கள் அடித்து விரட்டிய சம்பவங்களும் நிகழ்ந்தன.

நேற்று மத்திய அரசு மாநில அரசின் உள்துறை செயலர் மாநிலத் தலைமைச் செயலர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அந்தக் கடிதத்தில், கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த நாடெங்கும் முழு அடைப்பு நடைபெறுவதாகவும் இதற்கு சில விலக்குகள் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  மேலும் இது குறித்த விளக்கங்களும் அளித்துள்ளார்.

அந்த விளக்கங்கள் பின் வருமாறு :

அத்தியாவசியமானவை மற்றும் அத்தியாவசியமற்றவை என்னும் பாகுபாடின்றி அனைத்து பொருட்களின் போக்குவரத்தையும் அனுமதிக்க வேண்டும்.

ஓய்வூதிய விலக்கு என்னும் பிரிவின்கீழ் ஓய்வூதியம் மட்டுமின்றி பிராவிடண்ட் ஃபண்ட் மூலம் கிடைக்கும் உதவிகளையும் சேர்க்க வேண்டும்.

செஞ்சிலுவை சங்கங்களின் சேவைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

மளிகைப் பொருட்கள் என்பதில் கை கழுவும் பொருட்கள், சோப், கிருமி நாசினி, உடல் கழுவும் பொருட்கள், ஷாம்பு, தரை துடைக்கும் பொருட்கள், வாஷிங் பவுடரகள், சானிடரி நாப்கின்கள், டயாபர்கள், டிஷ்யு பேப்பர்கள்,  பற்பசை, பேட்டரி செல்கள், சார்ஜர்கள் போன்ற பொருட்களும் அடங்கும்.

குறிப்பாக செய்தித் தாள் விநியோகத்தை அனுமதிக்க வேண்டும்.

என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், “மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள உத்தரவின்படி அனைத்து மாவட்ட நிர்வாகமும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் மாநிலத்துக்குச் செல்வதை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  அவர்களுக்குத் தனிமை வசதிகள், தங்குமிடம், உணவு, ஊதியம் கிடைப்பது, வீட்டு உரிமையாளரால் வெளியேற்றப்படாமல் தடுப்பது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.