Random image

மகாராஷ்டிர வெள்ளப் பாதிப்பு: பொதுமக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மும்முரம்

மும்பை:

காராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை காரணமாக பால்கர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் மீட்டு வருகினற்னர். கடந்த 3 நாட்களாக மாநிலம் முழுவதும் பல இடங்களில் தேசிய மீட்பு குழுவை சேர்ந்தவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன்ர.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரம் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரண மாக  பஸ், ரெயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வாசை தாலுகாவில் உள்ள சின்சிட்டி வீழ்ச்சி பகுதியில் சிக்கிக் கொண்ட 106 பேரை தேசிய பாதுகாப்பு படையினர் மீட்டனர். பலத்த மழை காரணமாக நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த பகுதிக்கு சென்றவர்கள் திரும்ப முடியாத நிலையில் அவர்களை தேசிய மீட்பு படையினர் மீட்டு வந்தனர்.

அந்த பகுதியில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக வசாய், விரார் உள்ளிட்ட நகர பகுதிகள் மட்டுமின்றி பல கிராமங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மாணிக்பூரில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் உள்பட 66 பேர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் மிதவைகளில் சென்று அவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.

இதேபோல பால்கர் பொய்தாபாடா பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வீடுகளில் சிக்கி 120 பேர் தவித்தனர். அவர்களையும் மிதவைகளில் சென்று தீயணைப்பு படையினர், பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்டனர்.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள நாலச்சோப்ரா ரெயில் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன.

இதன் காரணமாக இந்த ரெயில் நிலையத்தில் 2-வது நாளாக நேற்றும் ரெயில் சேவை முடங்கியது. இந்தநிலையில் மும்பை நோக்கி வந்த வதோதரா மற்றும் சதாப்தி ரெயில்கள் நேற்று காலை நாலச்சோப்ரா- வசாய் இடையே தண்டவாளத்தில் சூழ்ந்து இருந்த வெள்ளத்தில் சிக்கியது.

இதையடுத்து அந்த ரெயில்கள் அங்கேயே நடுவழியில் நிறுத்தப்பட்டது. வெளியே இறங்கி செல்ல முடியாத அளவுக்கு அந்த பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து இருந்ததால் பயணிகள் ரெயிலுக்குள்ளேயே செய்வதறியாது தவித்தனர்.

இந்தநிலையில், பயணிகளை மீட்க மேற்கு ரெயில்வே தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரின் உதவியை நாடியது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ரெயிலில் சிக்கித்தவித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் நாலச்சோப்ரா அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மும்பை வருவதற்கு பஸ்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

மேலும் நடுவழியில் நின்ற சில ரெயில்களில் தவித்த பயணிகளுக்கு சுமார் 2 ஆயிரம் உணவு பொட்டலங்கள் சிறப்பு ரெயில் மூலம் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் தேசிய பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.