டில்லி:

மறைந்த நீதிபதி லோயா மரண வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 5ம் தேதியும் விசாரணை நடந்தது. அப்போது மூத்த வக்கீல்கள் துஷ்யந்த் தவே மற்றும் பல்லவ் சிஷோடியா ஆகியோர் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது நீதிபதி சந்திரசுத் இதில குறுக்கிட்டு மீன் மார்கெட் அளவுக்கு வார்த்தைகளை நீதிமன்றத்தில் பேச வேண்டாம்’’ என்று தெரிவித்தார்.

இதற்கு தேசிய மீனவர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேரவையின் தலைவர் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நீதிபதியின் இந்த கருத்து ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தையும் அவமதிப்பு செய்ததாகும். இது கண்டனத்திற்குரியது. இதனால் மீனவர்கள் மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த வழக்கில் மீன் மார்கெட் என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. ஏன் அவ்வாறு தவறாக அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது? என்று நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், அந்த வார்த்தையை நீதிபதி திரும்ப பெற வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.