சென்னை,

சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் சிற்பங்களுக்கு மத்திய அரசின் தேசிய புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புவியியல் சார்ந்த குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும்.

குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா 1999-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் புவிசார் குறியீட்டு சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்மூலம் வர்த்தகம் தொடர்பான தாவாக்களைத் தவிர்க்கவும், காப்புரிமை சட்டத்தையும், புவிசார் குறியீட்டையும் அளிக்கிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில்  காஞ்சிபுரம் பட்டு சேலைகள், திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன் பிஸ்கட், சேலம் மாம்பழம் உள்ளிட்ட 193 பொருள்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

இந்நிலையில், தற்போது மாமல்லபுரம் சிற்பங்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசு
அறிவித்துள்ளது.

தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாமல்லபுரம் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு 2013-ல் விண்ணப்பம் செய்யப்பட்டது. அதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.