தேசிய பசுமைத் தீர்ப்பாயம் டில்லி அரசுக்கு ரூ. 50 கோடி அபராதம்

டில்லி

குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்காத டில்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.50 கோடி அபராதம் விதித்துள்ளது.

டில்லியில் பல குடியிருப்பு பகுதிகளில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஏற்கனவே மாசு அதிகமாகி அவதியுறும் டில்லி நகர் இந்த தொழிற்சாலைகளால் மேலும் மாசு அடைந்து வருகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு எதிராக பல பொதுமக்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் டில்லி அரசுக்கு தொடர்ந்து புகார் அளித்தனர்.

ஆனால் டில்லி அரசு இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இதை ஒட்டி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் டில்லி அரசு மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் நடத்தினார்.

இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதில், ”குடியிருப்பு பகுதிகளில் விதிமுறைகளுக்கு புறம்பாக இயங்கி வந்த தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்காத டில்லி அரசுக்கு ரூ. 50 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலைகளால் டில்லி நகரம் மட்டுமின்றி யமுனை நதியும் கடுமையாக மாசு அடைகிறது. ஆதவே அந்த தொழிற்சாலைகளின் மீது டில்லி அரசு இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.