சட்ட விரோத தொழிற்சாலைகள்மீது நடவடிக்கை எடுக்காத டில்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டில்லி:

மாநிலத்தில் சட்ட விரோதமாக இயங்கி வரும் தொழிற்சாலைகள்மீது நடவடிக்கை எடுக்காத மாநில அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

டில்லி ரோஹினி பகுதியை சேர்ந்த என்.எஸ் யாதவ் என்பவர்,  தங்களது பகுதியில் இயங்கி வரும் ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், இதன்மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு என்ஜிபி தலைவரான  நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இதுகுறித்து மாநில   மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. ஆனால், அரசு தரப்பினர் ஒருதுறை மீது மற்றொரு துறை குற்றம் சாட்டிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனது.

இந்த நிலையில், இன்று தேசிய பசுமை தீர்ப்பாணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில்,  சட்டவிரோத நடவடிக்கைகளை கவனிக்காமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட அனுமதித்த டில்லி அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மீது ₹ 50 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்தது.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு  அமைத்து சட்டவிரோத தொழிற்சாலைகளை மூட நடிவக்கை எடுக்கும்படி டில்லி மாநில  தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டது.

மேலும், இதுதொடர்பாக  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.