ஸ்டெர்லைட்: பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு மேல்முறையீடு

டில்லி:

மிழக அரசால் சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணி களை மேற்கொள்ளலாம் என தேசிய பசுமை  தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று  அந்த பகுதி  மக்கள் நடத்திய 100வது நாள் மாபெரும் போராட்டத்தின்போது,  காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் மரணம் அடைந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பெரும் கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தர விட்டது.  இதையடுத்து கடந்த மே மாதம் 28-ந்தேதி நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனை எதிர்த்து டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கின் கடந்த 9-ஆம் தேதி  விசாரணையின்போது,  ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்ள வேதாந்தா குழுமத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.

அப்போது தமிழக அரசுக்கு,  ஆலையினால் மட்டும்தான் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது என தமிழக அரசால் உறுதியாக கூறமுடியுமா? ஆலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு படுகிறது என தமிழக அரசால் உறுதியாக கூறமுடியுமா என தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.

இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு உடனடியாக பதில் அளிக்காத நிலையில்,, வரும் 20ந்தேதி பதில் மனு தாக்கல் செய்ய தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகஅரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு குறித்து தலைமைச் செயலாளர், சட்டத்துறை அமைச்சர், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையை தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு விரைவில்  விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.