ஸ்டெர்லைட்: பசுமை தீர்ப்பாய தீர்ப்பு: இனி தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதில் தடையில்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவு:

“ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டுள்ள பசுமை தீர்ப்பாயம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

பசுமை தீர்ப்பாயம் 2010 பார்லிமென்ட் சட்டப்படி நிறுவப்பட்டது.

ஒரு அரசாணையை ரத்து செய்வதற்கு இந்த அதிகாரம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறி.

ஆனால் தமிழ்நாடு அரசு இதுகுறித்து ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தவில்லை.

வேதாந்தா நிறுவனத்தோடு கூட்டு வைத்துக் கொண்டு மறைமுகமாக உதவி செய்தது என்பதுதான் அனைவருக்குமான சந்தேகம்.

அரசாணை வெளியிட்ட போது அது குறித்த விவாதங்களில் நான் கூறியிருக்கிறேன்..

தமிழகத்தில் தாமிர ஆலை இருக்கக் கூடாது என்ற கொள்கை முடிவு எடுத்தால் மட்டும் தான் ஸ்டெர்லைட் மூடல் சாத்தியம்.

அரசாணை மிக எளிதாக எந்த நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாடு அரசு அப்படிப்பட்ட கொள்கை முடிவு எடுக்கவில்லை 13 உயிர்கள் பலியான பிறகும் மெத்தன போக்கு காட்டியது ஸ்டெர்லைட் நிறுவனத்தோடு தொடர்பு வைத்திருந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவு சில வருடங்களுக்கு முன் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தால் எடுக்கப்பட்டது.

அது உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே அரசு கொள்கை முடிவு எடுத்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யத தவறிவிட்டது.

ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த மனு நிலைக்கத் த்க்கது இல்லை என்ற வாதத்தை தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைத்தது..

அது தள்ளுபடி செய்யப்பட்டது அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யவில்லை

இப்போதாவது அரசு அமைச்சரவையை கூட்டி தாமிர உருக்காலை தமிழகத்தில் இருக்கக் கூடாது என்ற கொள்கை முடிவு எடுத்து அதற்கு பிறகு நீதிமன்றம் செல்ல வேண்டும்.

அப்படிச் செய்யாமல் இந்த ஆணையை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனால் மீண்டும் ஸ்டெர்லைட் வரும் அபாயம் இருக்கிறது.

அதிகாரபூர்வ ஆணை வெளிவருவதற்கு முன்பே அதன் நகல் வெளியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.”