நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா ராகுல் மேல்முறையீட்டு மனு மீது டிச.4ல் விசாரணை….

டில்லி:

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனு மீது டிச.4ந்தேதி விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

நேரு பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நஷ்டத்தில் இயங்கியதை தொடர்ந்து கடன் சுமையில் தத்தளித்தது. அதைத்தொடர்ந்து பத்திரிகை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், காங்கிரஸ் கட்சியின் பணத்தினால், அந்த பத்திரிகையின் கடன் அடைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில், ‘அசோசியேட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் சொத்துகளை ‘யங் இந்தியன்’ என்ற நிறுவனத்தின் மூலம் முறைகேடாக கையகப்படுத்தியதாக அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும்  ராகுல் காந்தி, கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கில்,  கடந்த 2011 – 12 நிதியாண்டுக்காக, அவர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று, சோனியா மற்றும் ராகுல் தரப்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டில்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என வருமான வரித்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக அறிவித்த உச்சநீதி மன்றம், இதன் மீதான விசாரணை வருகிற டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவித்தது.