சென்னை

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக பணியாற்றும் நீலப் மிஸ்ரா மரணம் அடைந்தார்.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் நீலப் மிஸ்ரா.   இவர் அவுட்லுக் பத்திரிகையின் இந்திப் பதிப்பில் பல ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர்.    டில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.   நவபாரத் டைம்ஸ் பத்திரிகையில்  தனது பத்திரிகையாளர் பணியை தொடங்கியவர்.   நீயுஸ் டைம் தொலைக்காட்சியின் ஜெய்ப்பூர் பகுதி ஆசிரியராக இருந்த இவர் கடந்த 1998 ஆம் வருடம் ராஜஸ்தானில் ஈநாடு தொலைக்காட்சியை தொடங்கினார்.

இந்தியாவின் முதல் பிரதமரான நேரு கடந்த 1938ஆம் வருடம் தொடங்கிய செய்தித்தாள் நேஷனல் ஹெரால்ட் ஆகும்.    அதை மீண்டும் 2016ல்  மீண்டும் மிஸ்ரா தொடங்கி நடத்த ஆரம்பித்தார்.     அத்துடன் 2017ல் நேஷனல் ஹெரால்ட் குடும்பத்தின் நவ்ஜீவன் மற்றும் குவாமி ஆவாஸ் ஆகிய செய்தி வலைத்தளங்களையும் நிறுவினார்.

கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை அப்பொலோ மருத்தவமனையில் இம்மாத முதல் வாரத்தில் மிஸ்ரா அனுமதிக்கப்பட்டார்.   அங்கு இவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற இருந்தது.    அப்போது அவருக்கு உடலின் ஒவ்வொரு பாகமாக செயலிழக்கத் தொடங்கியது.     அதன் காரணமாக நேற்று இரவு அவர் மரணம் அடைந்தார்.  57 வயதான அவர் உயிர் பிரியும் போது அவருடைய மனைவி,  சகோதரர், சகோதரர் மனைவி  மற்றும் சகோதரரின் மகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

அவருடைய மரணத்தினால் பத்திரிகை உலகமே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.   அன்னாரது மறைவுக்கு பத்திரிகை.காம் தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.