மாணவன் முடியை வெட்டிய ஆசிரியை….ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் 2015-ம் ஆண்டு ஆசிரியை ஜெயஸ்மிதா சா என்பவர் மாணவனின் முடியை வெட்டினார். . இதனால் மனமுடைந்த மாணவர் வீட்டுக்கு செல்லாமல் எங்கோ ஓடி விட்டார்.

இது குறித்து மாணவனின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆசிரியையை கைது செய்தனர். மேலும், மாணவரின் மன உளைச்சலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் திரிபாதி என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்தார்.

இதை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம் மாணவனுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்க தலைமை செயலாளருக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. எனினும் இந்த தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து 4 வார காலத்துக்குள் ஒரு லட்ச ரூபாயை வழங்கி அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.