ஜெ.நலம்பெற அலகு குத்திய விவகாரம்! தமிழக அரசுக்கு நோட்டீஸ்

டில்லி,

டந்த ஆண்டு உடல்நலமில்லாமல் சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி குழந்தைகளுக்கு அலகு குத்தி வேண்டுதல் செய்யப்பட்டது.

இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஓராண்டுக்கு பிறகு தற்போது, மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மறைந்த முதல்வர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் நலம்பெற வேண்டி அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்தனர். அதன் உச்சக்கட்டமாக ஜெ.வின் தொகுதியான ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த 20 குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக அலகு குத்தப்பட்டது.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது தேசிய மனித உரிமை ஆணையம்.

இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அவர் உடல் விரைந்து நலம் பெற வேண்டி அதிமுக ஆதரவாளர்கள் அக்டோபர் 3 ஆம் தேதி சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர். அப்போது, 20 குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக அலகு குத்தப்பட்ட தாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதரங்களை பார்க்கும் போது அலகு குத்தப்பட்ட குழந்தைகள் சிறிய வயதுடையவர்கள் என்பதும் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக அலகு குத்தப்பட்டதும் தெளிவாகிறது.

இதுகுறித்து சென்னை காவல்துறை ஆணையர் அளித்த அறிக்கையில் இச்சம்வத்தை உறுதி செய்துள்ளார். மேலும் அதில், குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களின் அனுமதியுடனே அழைத்து வரப்பட்டனர். யாரும் கட்டாயப்படுத்தப்பட்டு அழைத்து வரப்படவில்லை என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குழந்தை உரிமை மீறல் என்பதை ஒப்புக்கொண்டுள்ள அவர், அன்றைய தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் எச்சரிக்கைப்பட்டதாகவும், இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

எனினும், இரண்டு மீட்டர் அளவுள்ள இரும்பு கம்பிகளை குழந்தைகளின் கன்னத்தில் குத்தும் இந்த குற்றச்செயலுக்கு குழந்தைகளின் பெற்றோர் எப்படி அனுமதித்தனர் என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை.

இச்செயலினை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் தடுக்கவில்லை, எனவே இதுபோன்று தவறுசெய்த காவல்களை பெயரளவில் எச்சரித்தது மட்டும் போதாது. இச்சம்பவத்தில் குழந்தைகளுக்கு அலகு குத்த கட்டாயப்படுத்தியவர்கள் மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இச்சம்பவத்தின் போது தடுக்காத காவலர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்து 4 வாரக்காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசின் முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.