லண்டன்:

குழந்கைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இங்கிலாந்தில் பயிலம் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள 19 பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு செயல்படுகிறது. இந்த கூட்டமைப்பு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீர் காதுவா சிறுமி பலாத்கார கொலை மற்றும் உத்தரபிரதேச உன்னாவ் இளம்பெண் பலாத்காரம் காரணமாக தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதன் நகல் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில்,‘‘ இந்த இரு வழக்குகளிலும் நீங்கள் 13ம் தேதி வரை மவுனம் காத்துள்ளீர்கள் என்பது மீடியாக்களின் செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்து பேசியபோது நீதி கிடைக்கும் என்று தேசத்துக்கு உறுதியளித்துள்ளீர்கள். இது வரவேற்க்கத்தக்கது. ஆனால், இது எப்போது? எப்படி? என்பது தான் கேள்வி.

 

இந்தியர்கள் என்ற முறையில் இந்த இரு சம்பவங்களும் எங்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு வழக்குகளின் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகள், பெண்கள், குடிமக்கள் மீது இந்திய அரசு அக்கறை செலுத்தும் என்பதை நிரூபிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில், ‘‘குற்றவாளிகளுக்கு ஆதரவு இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில் உடனடியான நடவடிக்கை எடுப்பது இந்திய அரசுக்கு அவசியமாகும். பணமதிப்பிழப்பு போன்ற மிகப்பெரிய சிரமம் அளிக்க கூடிய முடிவுகளை எடுக்க நீங்கள் தவறவில்லை. அதேபோல் இந்தியாவின் மகள் விஷயத்திலும் இதை நிரூபிக்க அதீத நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத் மாநிலம் சூரத்திலும் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு அடுத்த வாரம் நீங்கள் வருகை தர உள்ளீர்கள். உங்களை வரவேற்க எங்களது கூட்டமைப்பு உள்பட பல அமைப்புகள் தயாராக உள்ளது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாங்களும், இந்த உலகமும் அறிந்து கொள்ளும் வகையில் தெரியப்ப டுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.