பிசிசிஐ பதவியில் நீடிப்பதற்கு ‘நாட்டு நலன்’ கோஷத்தை முன்வைக்கும் கங்குலி & ‍ஜெய்ஷா டீம்!

புதுடெல்லி: பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலி மற்றும் செயலராக உள்ள ஜெய்ஷா ஆகியோரின் பதவிகாலத்தை நீட்டிப்பதற்கான முயற்சியில், தற்போது ‘நாட்டு நலன்’ என்ற கோஷம் இணைந்து கொண்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது, தான் தேசிய விளையாட்டு ஆணையமல்ல என்பதை எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளது.

தற்போது, அதன் சட்டவிதிமுறையில், 6.4வது பிரிவில் திருத்தம் மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதியைக் கோரி காத்திருக்கிறது அந்த அமைப்பு. அதாவது, இந்த அனுமதிக்காக, ‘பொது மற்றும் தேசிய நலன்’ என்ற புதிய கோஷம் இணைக்கப்பட்டுள்ளது.

மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ அமைப்பில், தொடர்ந்து இரண்டு காலஅளவுகளில் பதவியில் இருந்தவர்கள், பிசிசிஐ அமைப்பில் இரண்டாவது முறை பதவி நீட்டிப்பு பெற வேண்டுமெனில், 3 ஆண்டுகள் இடைவெளி இருப்பது அவசியம். அந்தவகையில், கங்குலியும் ஜெய்ஷாவும் 3 ஆண்டுகள் பொறுமை காக்க வேண்டியுள்ளது.

எனவேதான், அந்தக் குறிப்பிட்ட சட்டவிதிமுறையில் திருத்தம் செய்வதற்கு உச்சநீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அந்த இருவரின் பதவிகாலம் கடந்த மாதமே நிறைவடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.