சென்னை,

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க இருப்பதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதா  விவகாரத்தில் மருத்துவர்களின் கருத்தை மத்திய அரசு கேட்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆணையம் அமைக்கப்பட்டால் அது மக்களையும், மருத்துவர்களையும் நேரடியாக பாதிக்கும் எனக்கூறி நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மசோதா குறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  “சுகாதாரத்துறையைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களில் உள்ள நிலைமை இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு லட்சம் மருத்துவர்கள் பணி புரிகின்றனர் என்றார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதாவில், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படும் என்ற முடிவை,  மருத்துவர்களிடம் கலந்தாலோசித்தே, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், இந்த மசோதாவில் உள்ள ஒருசில ஷரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என தமிழக அரசு சார்பில் ஏற்கனவே மத்திய அரசுக்கு கூறியுள்ளோம் என்றும், , சுகாதாரத்துறையில் முன்னேறிய மாநிலமான தமிழகத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என கோரியுள்ளோம் என்றும் கூறினார்.

மேலும், இன்று நடைபெற்று வரும் மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பு எதுவும் இல்லை. அரசு மருத்துவர்கள் ஒருமணிநேரம் மட்டும் அடையாள வேலைநிறுத்தம் செய்துவிட்டு பணிக்குத் திரும்பி விட்டனர். தனியார் மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சைகள் பாதிக்கப்படவில்லை.

‘இவ்வாறு அவர் கூறினார்.