தேசிய கட்சிகள் படுதோல்வி: மிசோரமில் ஆட்சி அமைக்கிறது மாநிலக்கட்சியான மிசோ தேசிய முன்னணி….

மிசோரம் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் தேசிய கட்சிகளை புறந்தள்ளிவிட்டு, மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணி பெரும்பான்மை பெற்று வருகிறது. இதன் காரணமாக அங்கு எம்என்எப் எனப்படும் மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.’

40 தொகுதிகள் கொண்ட  மிசோரம்  மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 28ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதுவரை  நடைபெற்றுள்ள வாக்கு எண்ணிக்கையில், மிசோ தேசிய முன்னணி 23 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 14 தொகுதியில் முன்னணியில் உள்ளது. பாஜக ஒரேயொரு இடத்திலும், சுயேட்சை 2 இடத்திலும் முன்னணியில் உள்ளன.

கடந்த தேர்தலில் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்ட மன்றத்தில், காங்கிரஸ் 34, தேசிய ஜனநாயகக் கூட்டணி 5, மிசோரம் மக்கள் மாநாட்டுக் கட்சி 1 இடங்களை பெற்றிருந்தன.

இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.