தேசிய மக்கள்தொகை பதிவேடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

டெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது.

அரசியலமைப்பு சட்டவிதிகள்படி 2020ம் ஆண்டு  ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட உள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை சரிபார்த்தல் பணி என 2 கட்டங்களாக நடக்கிறது.

2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை வீட்டின் நிலை, குடும்பங்களுக்கு கிடைக்கும் வசதிகள் மற்றும் சொத்துகள் போன்றவற்றை அடையாளம் காணப்படும்.

நாட்டு மக்களுக்காக 2010ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு குடிமகனும் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும். இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால், மேற்கு வங்கம், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இதனை அமல்படுத்த ஏற்கனவே மறுப்பு தெரிவித்துவிட்டன. ஆனால், இதை அமல்படுத்தி தான் ஆக வேண்டும், வேறு வாய்ப்புகள் கிடையாது என்று மத்திய அரசும் ஏற்கனவே தெரிவித்துவிட்டது.