டெல்லி: ரயில்வே, வங்கி, பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளுக்கு, பொதுவான தகுதித் தேர்வு நடத்தும் வகையில்  தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்தியஅமைச்சர்  பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தி யாளர்களிடம் கூறினார்.

அப்போது,  ரயில்வே, வங்கி, பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் பணிகளுக்குப் பொது வான தகுதித் தேர்வு நடத்துவதற்காகத் தேசிய பணியாளர் தேர்வு முகமையை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், விடுதலைக்குப் பிந்தைய இந்திய வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் என்றும் கூறினார். அதன்படி,

மூன்று தேர்வு வாரியங்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் வேலைதேடுவோர் தனித்தனியாகத் தேர்வு எழுத வேண்டியதில்லை.

இப்போது ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழிகளிலேயே நடத்தப்படும் தேர்வுகள் இனி 12 மொழிகளில் நடத்தப்படும்.

பொதுத் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மூன்றாண்டுகளுக்குச் செல்லும் .

என்றும், மதிப்பெண்களை உயர்த்த ஒருவர் மீண்டும் தேர்வெழுதலாம், அதில் அதிக எடுத்த அதிக மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

தொடர்ந்து பேசியவர், மத்திய அரசின் இந்த நடவடிக்கை வேலைதேடும் இளைஞர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்,  இதனால் தேர்வு, பணியமர்த்தம் ஆகியவை எளிமையாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும்,  ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்களைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடுவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும்,   நடப்பு அரைவைப் பருவத்தில் கரும்புக்குக் குவிண்டாலுக்கு 285 ரூபாய் என விலை நிர்ணயிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.