தேசிய குடியுரிமைப் பதிவேடு நாடு முழுவதும் கொண்டு வரப்படும்! அமித்ஷா

ராஞ்சி:

தேசிய குடியுரிமைப் பதிவேடு  அசாம் மாநிலத்துக்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும் கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

ராஞ்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியவர்,  தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி) அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டுவரப்படும், இதன் மூலம் நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தபடி, இந்த வாக்குறுதிக்குத்தான் மக்கள் எங்களுக்கு ஒப்புதல் வழங்கி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். என்ஆர்சி, அசாம் மாநிலத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கொண்டுவருவோம் என்று கூறியிருந்தோம். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதில் (என்ஆர்சி National Register of Citizens) பதிவு செய்யப்படுவார். சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் மீது சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதை நாடு முழுவதும் அமல்படுத்தும்போது, தேசத்தின் குடிமக்கள் குறித்த பட்டியல் கிடைக்கும் என்று நம்பு கிறேன் என்று கூறியவர்,  எந்த நாட்டிலும் யாரும் எளிதாகச் சென்று தங்கி, குடியேறிவிட முடியாது; அமெரிக்காவில் சென்று உங்களால் எளிதாகக் குடியேறிவிடமுடியுமா? இல்லை. நிச்சயமாக குடியேற முடியாது. அப்படி இருக்கும்போது வெளிநாட்டவர்கள் இந்தியாவில் மட்டும் எப்படி குடியேற முடியும் என்று கேள்வி விடுத்தார்.

தொடர்ந்து பேசியவர், நீங்கள் இங்கிலாந்து, நெதர்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சென்று  உங்களால் குடியேற முடியுமா என்றவர், அதற்க அந்நாட்டு அரசு அனுமதிக்குமா? என்று கேள்வி எழுப்பியவர், பின்னர் எப்படி மற்ற நாட்டைச்சேர்ந்தவர்கள்  இந்தியாவில் குடியேற அனுமதிக்க முடியும்? நம் நாட்டின் குடிமக்களுக்கு தேசிய பதிவேடு என்பது இந்த நேரத்தில் அவசியமான ஒன்று.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.