இந்திய தேசிய விளையாட்டு தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

இந்திய தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இன்றைய தினத்தில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசு தலைவர் விருதுகளை வழங்கி கௌரவிப்பார்.

sports

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹாக்கி விளையாட்டில் சாதனை படைத்த தயான்சந்த் நினைவாக அவரது பிறந்த நாளான இன்று தேசிய விளையாட்டு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

அந்த வகையில், டெல்லி ராஷ்டிர பவனில் விளையாட்டில் சாதனை படைத்த வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக குடியரசு தலைவர் கையால் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதில் உயரிய விருதான அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி விருது, கேல் ரத்னா விருது, துரோனாசாரியார் விருதுகள் வழங்கப்படும்,

தற்போது 18வது ஆசிய போட்டிகள் நடைபெற்று வருவதால், இத்தகைய விருதுகள் வழங்கும் விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 9 தங்கப்பதக்கம், 19 வெள்ளி மற்றும் 22 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது. இதுவரை 50 பதக்கங்களை வென்று தரவரிசையில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்திய மக்கள் அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துக் கொண்டார். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்த வாழ்த்து செய்தியில், “ இந்தியா சார்பாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற அனைவரையும் தலை வணங்குகிறேன். இந்த ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-