டில்லி

தூய்மை இந்தியா திட்டத்தின்படி கிராமப்புறங்களில் 95% கழிப்பறைகள் உள்ளதாக கூறும் போது அதற்கு மாறான தகவல் தேசிய புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  கழிப்பறை இல்லாத வீடுகளில் மத்திய அரசு கழிப்பறை அமைத்துத் தருகிறது.  இது பிரதமர் மோடியின் ஆதர்ச திட்டங்களில் ஒன்றாகப் புகழப்படுகிறது.    இந்த திட்டம் குறித்து இந்த வருடம் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி தனது உரையில் பல விவரங்கள் தெரிவித்துள்ளார்.   அது நாடெங்கும் பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.

மோடி, “நாட்டில் தற்போது திறந்த வெளியில் மலம் கழிப்பது அடியோடு நின்று விட்டது.   நாட்டில் நகர்ப்புறங்களில் 100 % மற்றும் கிராமப்புறங்களில் 95%  வீடுகளில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  அதைத் தவிர அனைத்து கிராமங்களிலும் பொதுக் கழிப்பறைகள் உள்ளன.   இந்த பெருமை நிச்சயம் அரசின் தூய்மை இந்தியா திட்டத்தைச் சேரும்” என  அறிவித்தார்.

தற்போது தேசிய புள்ளிவிவரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், “இன்னும் 28.7% வீடுகளில் கழிப்பறைகள் அமைக்கப்படாமல் உள்ளன.   இதனால் இன்னும் கிராமப்புறங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பது முழுமையாக முடிவுக்கு வரவில்லை.  கடந்த 2012  ஆம் ஆண்டின் கணக்குப்படி 40% வீடுகளில் மட்டுமே கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தன.   அது தற்போது 71% ஆகி உள்ளது நல்ல முன்னேற்றமாகும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கழிவறைகள் உள்ள வீடுகளிலும் ஒரு சிலர் கழிவறைகளைப் பயன்படுத்தாமல் உள்ளனர்.     இதற்கு முக்கிய காரணம் தண்ணீர் வசதி இல்லாதது எனத் தெரிய வந்துள்ளது.  அத்துடன் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறைகளுக்கான செப்டிக் டேங்க் ஒரே அறை உள்ளதாக கட்டப்பட்டுள்ளது.  சுமார் 10% செப்டிக் டேங்குகள் மட்டுமே இரு அறைகளாகக் கட்டப்பட்டுள்ளன.    இதனால் பல கழிப்பறைகளின் செப்டிக் டேங்குகள் நிரம்பி விடுதால் அவற்றை உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.” என அறிவிக்கப்பட்டுள்ளது.