பாவமன்னிப்பு வழக்கத்துக்கு முடிவு கட்டுங்கள்: தேசிய மகளிர் ஆணையம்

டில்லி:

த்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே நடைமுறையில் உள்ள பாவமன்னிப்பு வழக்கத்தை கைவிட வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வற்புறுத்தி உள்ளது.

பாவ மன்னிப்பு கேட்கும் பெண்களின் ரகசியத்தை வைத்து அவர்களை அச்சுறுத்துவதால், அதனை ஒழிக்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

திருமணமான பெண்ணிடம், “அவரது பாவமன்னிப்பு ரகசியத்தை வெளியில் கூறிவிடுவோம்” என்று மிரட்டி, பல முறை வல்லுறவு கொண்டதாக, கேரளாவைச் சேர்ந்த நான்கு பாதிரியார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கத்தோலிக்க தேவாலயங்களில்  நடைபெறும் பாவமன்னிப்பு வழங்கும் நடைமுறைகள் பெண்களை அச்சுறுத்துகிறது என மகளிர் ஆணையம் கூறியுள்ளது.

சமீபத்தில் கேரள தேவாலயங்களில் பாவமன்னிப்பு கோட்ட பெண்களை, தேவாலய பாதிரியார்கள் மிரட்டி வன்புணர்வு செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, பல பாதிரியார்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருமணமான பெண்ணிடம், அவரது பாவமன்னிப்பு ரகசியத்தை வெளியில் கூறிவிடுவோம் என்று மிரட்டி பல முறை வல்லுறவு கொண்டுள்ளதாக கேரளாவின் மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் சர்ச்சை சேர்ந்த நான்கு பாதிரியார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஆசிரியையான தன் மனைவியை பாதிரியார்கள் வன்புணர்ந்த தாக தேவாலயத்தில் புகார்க் கடிதம் அளித்த பின்னர்தான் இச்சம்பவம் வெளியே தெரிய வந்தது.

இந்த நிலையில், பாவ மன்னிப்பு குறித்து கருத்து  தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கூறியதாவது,

“கேரள தேவாலயங்களில்  தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்புணர்வுகள், பாலியல் அத்துமீறல்கள் பற்றி மத்திய அரசு ஒரு அமைப்பை ஏற்படுத்தி விசாரணை நடத்த வேண்டும்.

பாவமன்னிப்பு கோரும்போது கூறும் ரகசியங்களை வெளியே சொல்லிவிடுவேன் என்று மிரட்டி பாதிரியார்கள் கேரள ஆசிரியையை வன்புணர்ந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நமக்கு தெரியவந்துள்ள ஒரு சிறு துரும்பு தான். இதுபோல மேலும் பல சம்பவங்கள் இருக்கலாம் என தான் சந்தேகப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்ச்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைப் பற்றி ஆராய விசாரணை ஆணையம் ஒன்றையும் தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது.

இவ்வாணையம் தனது அறிக்கையை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி மற்றும் கேரள, பஞ்சாப் டி.ஜி.பி-க்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

அதில், பாவமன்னிப்பு நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும என்று வலியுறுத்தி உள்ளது.