புதுடெல்லி: காந்தி குடும்பத்தைச் சேராத வேறு யார் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு கொண்டுவரப்பட்டாலும், அடுத்த 24 மணிநேரத்தில் கட்சியானது பிளவைச் சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவருமான நட்வர் சிங்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே தலைவராக முடியும். அதுதான் அக்கட்சிக்கு நல்லது. அப்படி வேறு யாரேனும் கட்சித் தலைவர் பதவிக்கு கொண்டுவரப்பட்டால், அடுத்த 24 மணிநேரத்தில் கட்சி பிளவை சந்திக்கும்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு விஷயத்தில் பிரியங்கா காந்தியின் துணிச்சலான செயல்பாடு பாராட்டத்தக்கது. அவர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவாரா? என்று கேட்டால், முடிவு ராகுல் காந்தியின் கையில்தான் உள்ளது. ஏனெனில், தன் குடும்பத்தினர் யாரும் தலைவர் பதவிக்கு வரமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், பிரியங்கா காந்தியிடம் காங்கிரசின் தலைவராக செயல்படும் திறன் உள்ளது. பிரியங்கா காந்திக்கு அந்த விருப்பம் இருக்கிறதா? என்று தெரியவில்லை. நாட்டின் மிகப் பழைய கட்சிக்கு தலைவர் இல்லை என்பது துரதிருஷ்டவசமான நிலை. காந்தி குடும்பத்தினர்தான் அதற்கு பொருத்தமானவர்கள்” என்று கூறியுள்ளார் நட்வர் சிங்.