சென்னை மைலாப்பூரில்  நவகிரக தரிசனம் செய்யணுமா? 

சென்னை மைலாப்பூரில்  நவகிரக தரிசனம் செய்யனுமா?

சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோவில் அருகே, 6 பழமையான அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் உள்ளது. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவகிரகத்தோடு தொடர்பு இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மைலாப்பூரில் அருகருகே உள்ள இந்த ஏழு கோவில்களுமே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. ஶ்ரீராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோவில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபாடும் மரபு உள்ளது.

ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோவில் (சூரியன் ஸ்தலம்): மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோவிலுக்கு அருகில்தான் ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோவிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் முதலில் வழிபட வேண்டிய கோவில் இதுவாகும். இங்கு விசாலாட்சி அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சந்நிதியும் சூரியனார் சந்நிதியும் அம்பாளின் சந்நிதிக்கு அருகிலேயே உள்ளன. கோவில் ஸ்தல சிறப்பு சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோவிலாகவும், நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகவும் ஸ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோவில் திகழ்கின்றது. இங்குள்ள, ஆத்ம காரகன் சூரியனின் அம்ஸமாக திகழ்கிறார்.

ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோவில் (சந்திரன் ஸ்தலம்): மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். இதனாலேயே இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ஸ்தல சிறப்புகள் அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோவில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோவில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோவில் ஆகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவில் இறைவனைத் திங்கள் கிழமைகளில் வணங்கி வரத் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது என்பது தொன்நம்பிக்கை.

ஶ்ரீ வாலீஸ்வரர் கோவில் (செவ்வாய் ஸ்தலம்): ‘மயிலாப்பூரின் காவல் தெய்வம்’ என்றுகூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் உள்ளது ஶ்ரீவாலீஸ்வரர் கோவில். இந்தக் கோவில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோவில். இராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால்தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோவிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். ஸ்ரீ ராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஶ்ரீ மல்லீஸ்வரர் கோவில் (புதன் ஸ்தலம்): மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலை)யில் காரணீஸ்வரர் கோவிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஶ்ரீமல்லீஸ்வரர் கோவில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்குள்ள இறைவனும் மல்லீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பிகையின் திருநாமம் ஶ்ரீமரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் திறமை வாய்ந்தவர்களாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தக் கோவில் உள்ள மரகதவல்லி ஸமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்ஸமாகத் திகழ்கிறார். இவரைப் புதன் கிழமைகளில் வழிபடப் புத கிரக தோஷங்கள் விலகும்

ஶ்ரீ காரணீஸ்வரர் கோவில் (குரு ஸ்தலம்): சென்னை மாநகரில் மயிலாப்பூர் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோவில் சாலையும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது ஶ்ரீகாரணீஸ்வரர் கோவில். 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோவில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்பும் இந்தக் கோவிலுக்கு உள்ளது. ஶ்ரீகாரணீஸ்வரரை வியாழக் கிழமைகளில் வணங்கிவரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும்.

 ஶ்ரீ வெள்ளீஸ்வரர் கோவில் (சுக்கிர ஸ்தலம்) மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோவில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக அமைந்துள்ளது. மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகா விஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார். வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாக தலவரலாறு உள்ளது. எனவே, ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளிக் கிழமைகளில் வணங்கி வரக் களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்கும்

ஶ்ரீ கபாலீஸ்வரர் கோவில் (சனி ஸ்தலம்): மயிலையின் சப்த சிவதலங்களில் மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை ஸ்மேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலே நாம் முதலில் தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோவிலும் ஒன்று. l சிறப்புகள் ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோவில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். புன்னை மரத்தினடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. நவகிரகங்களில் ஆயுள் காரகனான சனைச்சரனின் அம்ஸமாக கபாலீஸ்வரர் அமைந்திருக்கிறார். இங்குச் சனிக் கிழமைகளில் வணங்கி வர ஆயுள் தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்

அருள்மிகு முண்டக கண்ணியம்மன் (ராகு ஸ்தலம்): திருமயிலையின் மருத்துவச்சி எனப் போற்றப்படும் முண்டகண்ணியம்மனே ராகுவின் அம்சமாகத் திகழ்கிறாள். கபாலீஸ்வரர் கோவில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு வழியாகக் கச்சேரி சாலையைக் கடந்து சென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணலாம். அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றால் மாதவ பெருமாள் திருக்கோவிலின் பின் புறம் அமைந்திருக்கிறது. இங்குள்ள புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்திபெற்றது.

அருள்மிகு கோலவிழியம்மன் (கேது ஸ்தலம்): ஜோதிடத்தில் துர்கை மற்றும் மாரியம்மன் ராகுவின் அம்சமாகவும் காளி கேதுவின் அம்சமாகவும் கூறப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சமாகத் திகழ்கிறாள். காரணீஸ்வரர், விருபாக்‌ஷீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு கோலவிழியம்மன் ஆலயம். இந்த அம்மனை வணங்கி வர அனைத்து தடைகளும் நீங்கும். மேலும் புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். l

எப்படிச் செல்லலாம் ?

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து மெரினா கடற்கரை வழியாகச் செல்கிறீர்கள் என்றால் சென்னை பொது மருத்துவமனை- பல்கலைக் கழகம் வழியாக ராதாகிருஷ்ணன் சாலை என சுமார் 8 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டை- அண்ணா சாலை வழியாக 7 கி மீ பயணித்தும் மைலாப்பூரை வந்தடையலாம்.