Random image

மதுரவாயல் பறக்கும் சாலை பணிக்கு கடற்படை இடம் ஒதுக்கீடு

சென்னை:

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு நிலம் ஒதுக்க கடற்படை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர் லாரிகள் வந்து செல்ல சவுகர்யமாக மதுரவாயல்-&துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 18 கி.மீ தூரத்துக்கு இந்த உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கப்படுகிறது. ரூ.3 ஆயிரம் கோடி செலவில் 6 வழிப்பாதையாக உருவாக்கப்படும் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த பறக்கும் சாலை கட்டுமான திட்டப் பணிக்காக கடற்படை நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடந்து வந்தது. சென்னை துறைமுக கழகமும், கடற்படையும் இணைந்து நடத்திய இந்த பேச்சுவார்த்தை தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்ய கடற்படை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனால் மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலைப் பணிகள் விரைவில் தொடங்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது. நில ஆர்ஜிதம் புனரமைப்பு, மறுசீரமைப்பு ஆகிய பணிகளில் சென்னை துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை ஈடுபட்டுள்ளது.

மதுரவாயலில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் கூவம் ஆற்றுப் பாதை வழியாக சென்னை துறைமுகத்துக்கு இந்த பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.