சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் ‘நிவர்’ புயலாக மாறி 25–ந்தேதி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (24ந்தேதி) சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 80லிருந்து 90 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழைக்கு வாய்ப்பு…. எண்ணூர், கடலூர் உட்பட 7 துறைமுகங்களில் 3–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற இருக்கிறது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 25-ந் தேதி (நாளை மறுதினம்) பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக்கூடும் என்றும்,  இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 590 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு சுமார் 15 கி.மீ.வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாளை கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80 லிருந்து 90 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 100 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

நிவர் புயல் காரணமாக,  நாளை (24ந்தேதி)  கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80லிருந்து 90 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர்  வேகத்திலும் வீசக் கூடும். இதன் காரணமாக  தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்

நாளை மறுநாள் (25ந்தேதி)  புயல் கரையைக் கடக்கும்போது காற்று மணிக்கு 100-லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.  நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கன மழையும், தஞ்சை, திருவாரூர், திருச்சி, கரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

புயல் காரணமாக,  இன்று தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டி தென் கிழக்கு வங்க கடலில் மணிக்கு 55 முதல் 75 கி.மீ. வரை சூறாவளி காற்று வீச கூடும். நாளை தென் மேற்கு வங்க கடல் மற்றும் தமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சுறாவளி காற்று மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வரை வீச கூடும். நாளை மறுநாள் தென் மேற்கு வங்க கடல் மற்றும் தமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சுறாவளி காற்று மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை வீச கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயல் காரணமாக எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.