சண்டிகர்:

அடுத்த (பிப்ரவரி) மாதம், பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையல், பிரபல (முன்னாள்) கிரிக்கெட் வீரர் சித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலுக்குள் வந்த நவ்ஜோத் சிங் சித்து,  பாஜக வில் இணைந்து பணியாற்றி வந்தார். அக்கட்சியின் எம்.பி.யாக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.   இந்த நிலையில் பாஜக தலைவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருந்தார்.

பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் சித்து இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க சித்து கோரியதாகவும், அதற்கு ஆம்ஆத்மி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

பிறகு ஆவாஸ் இ பஞ்சாப் என்ற கட்சியைத் தொடங்கிய சித்து,  பஞ்சாப் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இதற்கிடையே, கடந்த மாதம், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுலை சந்தித்து பேசினார். அப்போதிலிருந்தே சித்து காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தியை  நேரில் சந்தித்தார். பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில், தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக தெரிவித்தார் சித்து.   பின்னர், இந்த அறிவிப்பை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அதன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்றால், சித்து துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.