அமைதிக்கான தூதர் சித்து….இம்ரான்கான் புகழாரம்

இஸ்லாமாபாத்:

இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டித் தழுவிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சர்ச்சை குறித்து சித்து அளித்துள்ள விளக்கத்தில், “நான் உட்காரும் இடம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. விழா தொடங்க 5 நிமிடம் இருக்கும் போது முன் வரிசையில் அமருமாரு கூறினார்கள். அவர்கள் எங்கு அமர சொன்னார்களோ அங்கே அமர்ந்தேன்” என்று விளக்கம் அளித்தார்.
விழாவில் நான் கலந்து கொண்டது அரசியலுக்காக அல்ல. பழைய நண்பர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று தான் சென்றேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், லாகூருக்கு பேருந்தில் சென்றிருக்கிறார்.

பிரதமர் மோடி, திடீரென பாக்., பிரதமர் இல்லத்துக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அப்போது நவாஸ் ஷரீப்பை மோடி கட்டி அணைத்தார். ஆனால் யாரும் மோடியிடம் கேள்வி எழுப்பவில்லையே ஏன்?. ராணுவ தளபதியை கட்டித் தழுவியது ஒரு உணர்வு பூர்வமான செய்கையே. அவர் இந்தியாவின் தேரா பாபா நானக் வளாகத்திலிருந்து குருத்வார் கர்தார்பூர் சாஹிப்க்கான வழியை திறக்க முயற்சி செய்வதாக கூறினார்’’ என்றார்.

பதவி ஏற்பு விழாவில் சித்து கலந்துகொண்டது குறித்து இம்ரான் கான் கூறுகையில், ‘‘பதவியேற்பு விழாவுக்கு வந்ததற்காக நான் சித்துவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர் அமைதிக்கான தூதர். அவரை குறிவைத்து தாக்கும் சிலர் துணைக் கண்டத்தில் அமைதி நிலவ விரும்பவில்லை.அமைதி இல்லாமல் மக்கள் முன்னேற முடியாது. இருநாடுகளும் முன்னோக்கி செல்ல, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ’’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.