டில்லி:

17வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ள உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்வு நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்யை பதவி ஏற்பின்போது, பல எம்.பி.க்கள் பதவி ஏற்றதும், ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர்.

இதற்கு சுயேச்சை எம்.பி.யான நவ்நீத் கவுர் கண்டனம் தெரிவித்துள்ளார். கோஷம் எழுப்ப இது சரியான இடம் கிடையது என்று காட்டமாக தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்ற 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்களுக்கு இடைக்கால தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நேற்றைய பதவி பிரமாணத்தின்போது, சத்தியபிரமாணம் ஏற்ற பல பாஜக எம்.பி.க்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்பினர். இது மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா) மாநிலம் அமராவதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நவ்னீத் கவுர் ராணா, ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்புவதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கோஷம் எழுப்ப  இது சரியான இடம் அல்ல, அதற்க கோயில்கள் உள்ளன. இங்கு எல்லா கடவுள்களும் ஒரே மாதிரியானவை, ஆனால் ஒருவரை குறிவைத்து அந்த பெயரை எடுத்துக்கொள்வது தவறு என்று கடுமையாக சாடினார்.

மராவதி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக நாடாளுமன்றத்துக்கு செல்லும் நடிகை நவ்நீத் கவுர்,  அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் நவ்நீத் கவுர்.

இவர் கடந்த 2011ம் ஆண்டு மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதி யான ரவி ரானாவை காதலித்து திருமணம்  செய்து கொண்டார். ரவி ரானா ‘யுவா சுவாபிமாண் பக்‌ஷ’ என்ற தனிக்கட்சியை நடத்தி வருகிறார்.

இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமான உறவில் உள்ளார். அந்த கட்சியின் ஆதரவுடன் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமராவதி மாவட்டத்தில் உள்ள பட்நேரா சட்டப்பேரவைத் தொகுதியில் ரவி ரானா சுயேச்சையாக  போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தனது மனைவி நவ்நீத்தையும் அரசியலில் களமிறக்க அவர் முடிவு செய்தார்.

அவருக்காக தேசியவாத காங்கிரசிடம் பேசி அமராவதி மக்களவைத் தொகுதியை ரவி ரானா பெற்றார். அந்த தொகுதியில் தேசியவாத காங்கிரசின்  ஆதரவுடன் போட்டியிட்ட நவ்நீத் 5,10,947 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மக்களவைக்கு வந்துள்ளார்.