மேகாலயா சுரங்கத் தொழிலாளர்களை மீட்க கடற்படை நீர் மூழ்கி வீரர்கள் வருகை

லும்தாரி, மேகாலயா

மேகாலயா மாநிலத்தில் வெள்ளம் புகுந்த சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 15 தொழிலாளர்களை மீட்க கடற்படை நீர்மூழ்கி வீரர்கள் வந்துள்ளனர்

.

கடந்த 13 ஆம் தேதி மேகாலயா மாநிலத்தில் லும்தாரி என்னும் இடத்தில் உள்ள சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் பணி புரிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்தது. அதனால் 15 தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கினர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சுரங்கத்தில் சிக்கியவர்களில் இதுவரை ஒருவர் கூட மீட்கப்படாத நிலையில் சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்ற 10 சக்தி வாய்ந்த நீர் இறைக்கும் பம்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதைத் தவிர கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 9 சக்தி வாய்ந்த பம்புகளும் கொண்டு வரப்பட உள்ளன. இவை இன்னும் 3 தினங்களுக்குள் அங்கு வந்து சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாகப்பட்டினத்தில் இருந்து 16 கடற்படை வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நீர் மூழ்கி வீரர்கள் ஆவார்கள். இந்த நீர் மூழ்கி வீரர்கள் சுரங்கத்தில் இறங்கி சிக்கியவர்களை மீட்க உள்ளனர். பணிகள் தீவிரமடைந்துள்ள இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் இத்தனை நாட்களில் இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.