இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்ததை அடுத்து அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷாபாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக இருந்து வருகிறார். இவர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர்.

முன்னதாக,வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்கள் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரகசியமாக முதலீடு செய்திருப்பதாக பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதி ஆசிப் சையீத் கோஷா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யவும் நவாஸ் ஷெரீப்பைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.