பானாமா ஊழலில் கைது: ராவல்பிண்டி சிறையில் நவாஸ் ஷெரிப்புக்கு ‘பி வகுப்பு’ வசதிகள்
இஸ்லாமாபாத்,
பனாமா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறையில் ‘பி வகுப்பு’ கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பனாமா ஊழல் வழக்கு தொடர்பாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு 10 ஆண்டு சிறையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய நவாஸ்ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை லாகூர் விமான நிலையத்தில் வைத்தே காவல்துறையினர் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட நவாஸ் மற்றும் அவரது மகள் சிறப்பு விமான மூலம் இஸ்லாமாபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக இருவருக்கும் இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிபிற்கும் அவரது மகள் மரியம் நவாஸிற்கும் சிறையில் ”பி” பிரிவின் கீழ் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன்படி, அவர்கள் பணி செய்ய வேண்டிது இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு அறையில் ஒரு மெத்தையுடன் கூடிய கட்டில், நாற்காலி, டீபாட், விளக்கு உள்ளிட்டவை பொதுவாக இருக்கும். மேலும் தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி, பிரிட்ஜ், செய்தித்தாள்கள் ஆகிய வசதிகளும் செய்துத் தரப்படும்.
அதுபோல, தங்களுக்கு பிடித்தமானவற்றை மட்டும் அவர்கள் செய்து சாப்பிடலாம். இதற்கான செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரீப் கைதை எதிர்த்து, அவரது கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.