ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று பனாமா கேட் வழக்கில் நவாஸ் ஷெரிஃபை தகுதி நீக்கம் செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர் என்று பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் பல்வேறு ஆவணங்கள் வெளியாகின.  இந்த ஆவணங்கள் பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, ‘மொசாக் பொன்சேகா’ நிறுவனத்தின் உதவியுடன் வெளியிடப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவர் குடும்பத்தினர்கள் பெயரும் அந்த பட்டியலில் இருந்ததால், அவருக்கு எதிராக விசாரணை உத்தரவிடப்பட்டது.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு  ஒன்றை அமைத்து அதன் மூலம்  விசாரணை நடத்த உத்தரவிட்டது.  அந்த குழுவில் ஆறு உறுப்பினர்கள் இருந்தனர்.  புலனாய்வுக்குழு விசாரணையில் நவாஸ் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் வாக்குமூலம் அளித்தனர்.  அத்துடன் நவாஸ் ஷெரிஃப் குடும்பத்துக்கு  நெருக்கமானவர்களிடமும் விசாரணை நடந்தது.

விசாரணை முடிந்த பின்,  அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில், ஜூலை 10ஆம் தேதியன்று இக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருக்கிறது என்றும், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதையொட்டி ஷெரிஃப் பிரதமர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க் கட்சிகள் வற்புறுத்தின.  ஆனால் அவர் பதிவி விலக மறுத்து விட்டார்.

இந்த வழக்கில் தற்போது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நவாஸ் ஷெரிஃப் ஃபை தகுதி நீக்கம் செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.