சண்டிகர்:

இந்தியாவில் நக்சலைட்டுகளின் இறுதிக்காலம் நெருங்கி விட்டது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

 

நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிஆர்பிஎஃப்பின் 79வது எழுச்சி தின விழா ஹரியானா மாநிலம் குருகிராமில் நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘நாட்டிற்கு தீவிர சவாலாக இருந்த நக்சல்களுக்கு இறுதி கட்டம் நெருங்கிவிட்டது. அதேபோல் மாவோயிஸ்ட்டுகளும் பாதுகாப்பு படையினருடன் நேரடியாக சண்டையிட முடியாமல் கோழைத்தனமான தாக்குதலை நடத்துகின்றனர்.

நக்சல்கள் ஏழைகளின் விரோதிகள், பழங்குடி இன மக்களின் விரோதிகள், வளர்ச்சியின் விரோதிகள் என்பதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர். முன்பு பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் பலியாவது அதிகமாக இருந்தது. ஆனால் தற்பேபது மாவோயிஸ்ட்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது’’என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘பயங்கரவாதிகளுடனான சண்டையில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சிஆர்பிஎஃப் வீரர்களின் விசுவாசத்தை சிதைக்க உலகில் எந்த குண்டும் இல்லை.

இழப்பீடு தொகை எவ்வளவு வழங்கினாலும் இழந்த உயிருக்கு அது ஈடாகாது. ஆனாலும் வீரமரணம் அடைந்த வீரரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது’’ என்றார்.