சிறையில் உயிருக்குப் போராடும் பெண் நக்சலைட்: சிறைத்துறை மீது புகார்

சிறைவாசியான பெண் நக்சலைட் பத்மா உயிருக்குப் போராடுவதாகவும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க சிறைத்துறை நிர்வாகம் மறுப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

நக்சல் கடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் மார்க்ஸ்சிஸ்ட் – லெனினிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த பத்மா.  அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க சிறைத்துறை மறுப்பதாக தமிழ்நாடு மக்கள் சிவில் உரிமை கழகம்  குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து  அந்த அமைப்பின் மாநில தலைவர் கன. குறிஞ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“மார்க்சிய லெனினிய  செயற்பாட்டாளர் பத்மா பத்து வருட தலைமறைவுக்குப் பிறகு,  கடந்த டிசம்பர் ஏழாம் தேதி தமிழகக் காவல்துறையிடம் சரணடைந்தார்.  அவர் இதய நோயாளி. சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு  டிசம்பர் 10 ஆம் தேதி இதயநோய் தீவிரமானது. இதனால்  அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் உயிருக்குப் போராடும் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படவில்லை.  தண்டனைச்சிறைவாசிக்குரிய மருத்துவ சிகிச்சை மட்டுமே  அவருக்கு அளிக்கப்பட்டது.

 

டிசம்பர் 13ஆம்  தேதி மதியம் 1 மணிக்கு அவர் மருத்துவ மனையிலிருந்து விடுவிக்கப்பட்டு,  மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால்  மோசமான உடல்
நிலை காரணமாக அடுத்த  இரண்டரை மணி நேரத்தில் மீண்டும் மீண்டும் ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.  ஆனாலும் இரண்டு நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதிக்கப்பட்டார். மீண்டும்  அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

டிசம்பர் 20 ஆம் தேதி மாலை 7 மணி அளவில் மீண்டும் அவரது உடல் நிலை மிக மிக மோசமானது. இதையடுத்து மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

சிறைவாசிகள் கடும் நோயினால் பாதிக்கப்படும் பொழுது, அவர்களை மருத்துவமனை க்கு கொண்டு சென்று உரிய மருத்துவ சிகிச்சை கொடுப்பது தான் சட்ட நியதியாகும். ஆனால் சிறைத்துறையினர்  சட்டத்திற்கு புறம்பாக, பத்மாவுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை மறுத்து வருகிறார்கள்.  சிறைச்சாலை நிர்வாகத்தின் இந்தச் செயல் மனித உரிமை மீறலாகும்  சிறையில் தோழர் பத்மாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.  இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க இருக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.