எய்ம்ஸ் மருத்துவர்களை விட அதிக ஊதியம் பெறும் மருத்துவர்கள் எங்குள்ளனர் தெரியுமா?
டில்லி
நக்சல்வாதி தீவிரவாதிகள் நிறைந்துள்ள பகுதிகளில் உள்ள மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை விட அதிகம் ஊதியம் பெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.
நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள் இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றனர். அதை ஒட்டி அவர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது வெளியிடப்பட்ட அரசு தகவல்படி அது தவறானது என தெரிய வந்துள்ளது.
உதாரணமாக ஆக்ரிதி சுக்லா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் பிஜாப்பூர் மருத்துவமனையில் பணி அளிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாத ஊதியமாக ரூ. 2 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. 29 வயதாகும் ஆக்ரிதி கடந்த வருடம் தனது அறுவை சிகிச்சை மருத்துவ பட்டமேற்படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் சத்திஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இவருடன் படித்தவருக்கு ரூ. 56000 மாத ஊதியத்தில் பணி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் இந்த பகுதிகள் நக்சல்வாதி தீவிரவாதிகளின் தாக்குதல் அடிக்கடி ஏற்படுவதே காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் வருடம் மட்டும் இந்த பகுதிகளில் 127 நக்சல் தாக்குதல்கள் நடந்துள்ளன. அதை ஒட்டி இங்குள்ள மக்கள் உயிருக்கு பயந்து இங்கிருந்து வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர். அது தவிர மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் இங்கு பணி புரிய தயாராக இல்லை.
இதை ஒட்டி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் மற்றும் தாந்தே வாடா மட்டும் இன்று ஒரிசாவின் கியோஞ்ஜர் பகுதியிலும் மருத்துவர்கள் மிகவும் அதிக ஊதியம் அளித்து பணி அமர்த்தப் படுகிறார்கள். இதற்கான நிதி உதவி இங்குள்ள தாதுச் சுரங்க உரிமையாளர்களிடம் இருந்து பெறப்படுகிறது.
நக்சல் தாக்குதல்களால் இங்குள்ள மக்கள் வேறு இடம் குடி பெயர்வதால் பணி ஆட்கள் கிடைப்பதில்லை. மற்றும் வசிக்கும் மக்களுக்கும் மருத்துவ உதவிகள் கிடைக்காததால் மேலும் ஆட்கள் பற்றாக்குறை உண்டாகலாம். இதனால் சுரங்க நிர்வாகம் மருத்துவர்களுக்கு அதிக ஊதியம் அளிக்க நிதி உதவி வழங்கி வருகிறது. அதை ஒட்டி இங்குள்ள மருத்துவர்களுக்கு அதிக ஊதியம் கிடைத்து வருகிறது.