சசிகலாவை சிக்கவைத்த டி.ஐ.ஜி.ரூபாவாக நடிக்கிறார் நயன்தாரா?

--

பெங்களூர்,

சொத்துக்குவிப்பு வழக்கில்  கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அங்குள்ள சிறை வார்டன்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, சொகுசாக வாழ்ந்து வந்தது சிறைத்துறை டிஐஜி ரூபாவால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செய்தி தறபோது படமாக தயாரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் சசிகலா தங்கியிருந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபாவை மையமாக வைத்து அதிரடி சினிமா படம் தயாரிக்க இயக்குனர் ஏஎம்ஆர். ரமேஷ் முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நயன்தாரா அல்லது அணுஷ்காவை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இயக்குனர் கூறி உள்ளார்.

இந்த படத்தை இயக்க உள்ள இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் ஏற்கனவே,  குப்பி, காவலர் குடியிருப்பு, வனயுத்தம் , ஒரு மெல்லிய கோடு போன்ற படங்களை இயக்கியவர்.

இந்த படம் குறித்து இயக்குநர் ரமேஷ் கூறியதாவது,  ‘சிறைத் துறையில் நடக்கும் முறைகேடு களை மையமாக வைத்தே படம் இயக்க இருக்கிறேன். இது தொடர்பாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபாவிடம் பேசினேன். அவரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக சம்மதம் தெரிவித்துள்ளார்.

படத்தை சிறப்பாக கொண்டுவர தேவையான  சில தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தில், ரூபா கேரக்டரில் அனுஷ்கா அல்லது நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.